உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் சாகசம் - பொதுமக்கள் அச்சம்

Published On 2022-01-04 11:47 IST   |   Update On 2022-01-04 11:47:00 IST
போலீஸ் கண்காணிப்பு குறைந்த வீதி மற்றும் சாலைகளில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் சிறுவர்கள், இளைஞர்கள் பலர் விலையுயர்ந்த அதிநவீன மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். சாலையில் நடந்து செல்வோரை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். 

அவர்களது அதிவேக பயணம் பெரும் விபத்தும் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும். சாலையில் போலீசார் சார்பில் மையத்தடுப்பு உள்ளிட்ட வேக கட்டுப்பாட்டு சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், பொறுமையின்றி அப்பகுதியை அதிவேகத்தில் இளைஞர்கள் கடந்து செல்வதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டியுள்ளது.

குறிப்பாக, போலீஸ் கண்காணிப்பு குறைந்த வீதி மற்றும் சாலைகளில் வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். 

மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் சமீபத்தில் நடந்த நுகர்வோர் குறைதீர்ப்பு காலாண்டு கூட்டத்தில் திருமுருகன்பூண்டி தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் தலைவர் காதர்பாட்ஷா, பொது செயலாளர் ராமலிங்கம், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இக்கோரிக்கையை கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் மாலை நேரங்களில் கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், உள்ளூர் இளைஞர்கள் சிலர் பெண்களை கேலி கிண்டல் செய்வது, அடிதடி கலாட்டாவில் ஈடுபடுவது, பஸ்சில் தொங்கியபடி பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 

இத்தகைய நிகழ்வுகள் அதிகளவில் நடப்பதாக அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாலை நேரத்தில் ‘மப்டி’ போலீசாரை பணியமர்த்தி தகராறில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News