கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (5-ந்தேதி) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார்.
இதையடுத்து நேற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அவரது கார் டிரைவர் ஜான் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மூவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டும், பெரம்பலூர் நகரத்தில் உள்ள வார்டுகளில் வீடு, வீடாக சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும்வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் எம்.எல்.ஏ. பிரபாகரன் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.