உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி அருகே கல்லூரி மாணவர் மர்ம மரணம்
புத்தாண்டு கொண்டாட சென்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எஸ்.குளவாய்பட்டி அஞ்சல் சேந்தான்குடி ஊராட்சி மாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் பாண்டிமுருகன் (வயது 19). இவர் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் புத்தாண்டு கொண்டாட செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாண்டிமுருகனின் தாயார் சோலையம்மாள், வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவர் பாண்டிமுருகனை தேடிவந்தனர்.
இந்நிலையில் மாயனூர் குளம் மற்றும் பெருமாள் குளம் இரண்டிற்கும் இடைப்பட்ட சாலையில் உள்ள பாலத்தின் கீழ் தண்ணீரில் பாண்டிமுருகன் பிணமாக கிடப்பதாக வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டிமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? யாரும் அவரை கொலை செய்து இங்கு வந்து வீசி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.