உள்ளூர் செய்திகள்
மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
கணவர் தினமும் குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த தொழிலாளி பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்டார்
பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துசாமி, கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி லட்சுமி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை கவனித்த அப்பகுதியினர், உள்பக்கமாக பூட்டியிருந்த கதவை தட்டியுள்ளனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால், ஜன்னலை திறந்து பார்த்தபோது முத்துசாமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்றனர். தூக்கில் பிணமாக கிடந்த முத்துசாமியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், முத்துசாமி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு வரும்போது, மது அருந்தி விட்டு வருவதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த, முத்துசாமியை, மனைவி லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி, 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மன விரக்தியில் இருந்த முத்துசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.