உள்ளூர் செய்திகள்
சேவல் சூதாட்டம், மது விற்பனை - 11 பேர் கைது
மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. அவர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் அதிரடியாக சோதனை நடத்தி அரசு மதுபானக் கடைகளின் முன்பாக சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேவல் சண்டை நடத்த கூடாது என்று அரசு தடைசெய்துள்ளது. இந்நிலையில் உடுமலை சிங்கப்பூர் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ., தங்கவேல் அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட கருப்புசாமி (வயது 32), நவ்பிக்(22) ஆகியோர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சேவல் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.