உள்ளூர் செய்திகள்
தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை சோகத்துடன் பார்க்கும் விவசாயிகள்

பலத்த மழை- 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Published On 2022-01-03 09:43 IST   |   Update On 2022-01-03 09:43:00 IST
அறந்தாங்கி அருகே பெய்த பலத்த மழைக்கு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட கருங்காடு, பாண்டிபத்திரம், குளத்துக் குடியிருப்பு, பெருநாவளூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் ஆற்று நீர் அல்லாமல், மழை நீரை நீர் நிலைகளில் சேமித்து வைத்து அதனை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு உரிய நேரத்தில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து, பயிர்கள் செழித்தன.

நெற்பயிர்கள் முற்றி இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு பெய்த தொடர் கனமழையால் விவசாயத்தை முற்றிலும் இழந்த நாங்கள், அதற்கான பயிர்க்காப்பீடு தொகை இதுவரை கிடைக்கவில்லை, முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இந்தாண்டு, கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் போன்றவற்றில் நகைக்கடன் வாங்கி ஏக்கர் ஒன்றிற்கு 25 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்தோம்.

ஆனால் இந்த முறையும் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். மேலும் நீரில் மூழ்கி தப்பித்த ஒரு சில வயல் கதிர்களை, தண்ணீருக்குள் அறுக்கும் எந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூ.3600 வரை செலவாகிறது.

இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையை சந்தித்து வருகிறோம். எனவே அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து, உரிய நிவாரணம் வழங்க கேட்டுக் கொண்டனர்.




Similar News