உள்ளூர் செய்திகள்
நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள காட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது-பயிர்கள் மூழ்கின

Published On 2022-01-02 15:30 IST   |   Update On 2022-01-02 15:30:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
ஆலங்குடி:

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனறு வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆலங்குடி அருகேயுள்ள குறுந்தடிமனை கிராமத்தில் குளம் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குளத்தின் பரப்பளவில் 15 ஏக்கரில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளான சுப்பையா, ராஜேந்திரன், முருகன், ராமச்சந்திரன், செல்வராஜ், பிரபு, நடராஜன், துரைராஜ் மற்றும் பல விவசாயிகளின் சம்பா நெற்பயிர்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு பெய்த பருவமழை மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பருவம் தவறிய மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆண்டு 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில் இன்னும் 10, 15 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய சூழல் இருந்த போது கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கதிர் அறுக்கக்கூடிய சூழலில் தண்ணீருக்குள் நெற்பயிர்கள் மூழ்கி இருப்பது விவசாயிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது. பல ஆண்டுகாலமாக புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் போதிய மழை இல்லாததால் சம்பா சாகுபடி பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. இந்த ஆண்டு பருவமழை பெய்தும் பலனற்று போனதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் அப்பகுதியில் தரைப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் அந்த வழியாக மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் அந்த வழியாக போக்குவரத்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். 

Similar News