உள்ளூர் செய்திகள்
கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்
கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் டாஸ்மாக் விற்பனையாளர் புகார் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் டாஸ்மாக் விற்பனையாளர் பாண்டியன் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து புகார் அளித்த மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியதாவது:
நான் நெமிலி தாலுக்கா வேகாமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறேன். அரக்கோணத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறேன்.
வீடு கட்டும் பணிக்காக அரக்கோணத்தை சேர்ந்த சிலரிடம் பணம் வாங்கினேன்.
வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்திய நிலையில் கடன் தொகைக்கு மேல் தினசரி வட்டி மீட்டர் வட்டி என கூறி எனது வீட்டில் இருந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கந்துவட்டி கும்பல் எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும் பணம் கேட்டு எனது குடும்பத்தினரை மிரட்டுகின்றனர்.
இதனால் நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளோம். பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.