உள்ளூர் செய்திகள்
மளிகை பொருட்கள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

புதுக்கோட்டையில் 4¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு

Published On 2022-01-01 17:09 IST   |   Update On 2022-01-01 17:09:00 IST
புதுக்கோட்டையில் 4¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதையொட்டி குடோன்களில் இருந்து பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் பொங்கல் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், திராட்சை, நெய் மற்றும் மளிகை பொருட்கள் பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகு, கடுகு, சீரகம், புளி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கோதுமை, உப்பு, முழு கரும்பு உள்பட மொத்தம் 21 வகையான பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து பரிசு தொகுப்புகள் அடங்கிய மளிகை பொருட்கள் லாரிகளில் மூலம் மூட்டை, மூட்டையாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் லாரிகளில் அனுப்பப்பட்ட அந்த மூட்டைகள் ரேஷன் கடைகளில் இறக்கி வைக்கப்பட்டன. இதேபோல் மற்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டி உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கிய பின் மாவட்டங்களில் 21 வகையான பொருட்கள் வினியோகிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,028 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 187 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 968 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News