உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை - கலெக்டர் உத்தரவு

Published On 2021-12-30 16:54 IST   |   Update On 2021-12-30 16:54:00 IST
பொதுமக்கள் அதிகம் கூடினால் தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதே தவிர முழுவதுமாக அழிந்து விடவில்லை. ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறி வீரியத்துடன் பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ளபடி, நாளை (வெள்ளிக்கிழமை) வரை சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது. மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) புத்தாண்டு பிறப்பு, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தொடர்பான விழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் கூடினால் நோய் பரவல் அதிகரிக்கும். ஆகவே இந்த விழாக்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அந்த நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யாமல், வழிபாட்டு தலங்களுக்குள் வழிபாடு நடத்தலாம்.

அப்போது முக கவசம் அணிய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு தான் நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் காணும் பொங்கல், பொங்கல், ஆற்றுத்திருவிழா அன்று ஆறுகள், கடற்கரைகளில் நடக்கும் விழாக்கள் இந்த ஆண்டும் நோய் பரவலை முன்னிட்டு தடை செய்யப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News