உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

உசிலம்பட்டி அருகே பெண் சிசுக்கொலையா?- குழந்தையின் பெற்றோர் தொடர்ந்து தலைமறைவு

Published On 2021-12-30 13:09 IST   |   Update On 2021-12-30 13:09:00 IST
உசிலம்பட்டி அருகே பெண் சிசு மர்மமாக இறந்தது தொடர்பாக குழந்தையின் பெற்றோரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் சேடப்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய கட்டளையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி- கவுசல்யா தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாகவும் கடந்த 21-ந் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. 

ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தம்பதியர்  பெண் குழந்தை பிறந்ததால் வேதனையடைந்துள்ளனர். இருப்பினும் குழந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

ஆனால் 26-ந்தேதி பச்சிளம் பெண் குழந்தை திடீர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், அதனால் வீட்டு முன்பு புதைத்து விட்டதாகவும்  அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தனர்.  ஆனால் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். 

இதன் அடிப்படையில் பேரையூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தலைமையிலான மருத்துகுழுவினர் முன்னிலையில் பெண் சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணி நடைபெற்றது.  

புதைக்கப்பட்ட இடத்தில் சிசுவின் உடல் கைப்பற்றப்பட்ட பின்னர் சம்பவ இடத்திலேயே  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவில் பெண் சிசுவின்  வலதுபக்க தலையில் காயம் உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மற்ற விவரங்கள் முழுபரிசோதனை முடி வுக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் ரவிச்சந்திரன், சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். பெண் சிசு அடித்துக் கொல்லப்பட்டதா? அல்லது உடல் நலக்குறைவு காரணமாக இறந்ததா? என்பது குறித்து சேடப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பெண் சிசு புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதில் இருந்து முத்துப்பாண்டி, கவுசல்யா தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். 

2 பேரும் சிக்கினால் தான் இந்த வழக்கில் உண்மை விவரம் தெரியவரும். 

Similar News