உள்ளூர் செய்திகள்
விபத்து

விழுப்புரம் மாவட்டத்தில் ஓராண்டில் நடந்த வாகன விபத்துகளில் 442 பேர் உயிரிழப்பு

Published On 2021-12-30 05:52 GMT   |   Update On 2021-12-30 05:52 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் ஓராண்டில் நடந்த வாகன விபத்துகளில் 442 பேர் இறந்துள்ளனர். 1,902 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. காவல்துறைசார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துதான் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2,046 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,902 பேர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு 1,926 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 438 பேர் இறந்துள்ளனர். 2,087 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 120 சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதோடு பலி எண்ணிக்கையும் 4 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் விபத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 185 ஆக சற்று குறைந்துள்ளது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் தாறுமாறாகவும், அதிவேகமாக செல்வதாலும்தான் தொடர் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. எனவே பிறக்க இருக்கிற 2022-ம் ஆண்டில் சாலை விபத்துகளை மேலும் குறைக்கும் வகையிலும், விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்கும் வகையிலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News