சாலிகிராமத்தில் வீடு புகுந்து பெண் உள்பட 3 பேரை தாக்கி கொள்ளை- போலீஸ் என்று கூறி கைவரிசை
போரூர்:
சென்னை சாலிகிராமம் காந்தி நகர் பெரியார் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக். ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சிவா, அனுராஜன் மற்றும் ஒரு இளம்பெண் உள்ளிட்ட நண்பர்கள் 3 பேரும் தங்கி உள்ளனர்.
கார்த்திக் வீட்டிற்கு நேற்று இரவு 8மணி அளவில் 5பேர் கும்பல் வந்தனர் “நாங்கள் தனிப்படை போலீஸ்” என்று கூறிய கும்பல் “வீட்டில் யாரெல்லாம் தங்கி உள்ளீர்கள். இங்கு என்ன நடக்கிறது” என்று கூறிய படியே திடீரென அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயன்றனர். அவர்களை சிவா தடுத்தார். அப்போது இளம்பெண் உட்பட வீட்டில் இருந்த 3பேரையும் சரமாரியாக தாக்கிய கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை, ரூ.30ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 விலை உயர்ந்த செல்போன்களையும் பறித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் வீட்டிற்குள் வைத்து கதவை வெளிபக்கம் பூட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து கதவை திறந்து 3 பேரையும் மீட்டனர்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.