உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பெரம்பலூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-12-25 10:38 GMT   |   Update On 2021-12-25 10:38 GMT
பெரம்பலூர் அருகே துறைமங்கலத்தில் போதிய அளவு குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் புறநகர் பகுதியான நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு துறைமங்கலம் அவ்வையார் தெரு பகுதியில் 2 வாரங்களுக்கு ஒரு முறை குழாய்கள் மூலம் காவிரி குடிநீர் சுமார் 2 மணி நேரம் வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 11 நாட்களுக்கு முன்பு ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டதாகவும், அப்போது குழாய்களில் தண்ணீர் குறைந்த அளவே வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது, இனி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் ஒரு மணி நேரம் வினியோகிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு வாரம் தாண்டியும் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த கிணற்று தண்ணீரும் சரியாக வினியோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலம் அருகே உள்ள சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அளவு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். மேலும் அந்தப்பகுதிகளில் தற்காலிகமாக நகராட்சி லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

Tags:    

Similar News