உள்ளூர் செய்திகள்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - கோயம்பேட்டில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கம்
பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் நேற்று முதல் பயணம் மேற்கொண்டனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பின. தற்போது முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதால் நெரிசலுடன் பயணிகள் பயணம் செய்தனர்.
திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை மார்க்கம் மட்டுமின்றி சேலம், கோவை மார்க்கமாக திருவனந்தபுரம் செல்லக்கூடிய ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி இருந்தன.
எழும்பூர், தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பியதால் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர். ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று மாலை வரை விடுமுறை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனால் இன்றுவரை அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஒருசில தனியார் பள்ளிகள் நடைபெறுகின்றன. பள்ளிகளுக்கு 9 நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளதை தொடர்ந்து சொந்தஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கூடுதலாக பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டன. நேற்று முதல் வழக்கத்தைவிட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படும். அத்துடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 250 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு விரைவு பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. முன்பதிவு செய்த பயணிகள் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டன.
வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் அதிகரித்துள்ளது.