உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே ஊழியர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
அரக்கோணம் அருகே ஊழியர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது சம்பவத்தில் அதிஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் 7 பேர் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிற்சாலைக்கு ஒரு தனியார் வேனில் நேற்று காலை வந்து கொண்டிருந்தனர். அந்த வேன் தொழிற்சாலை அருகில் வந்த போது திடீரென வேனில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் வேனை நிறுத்தி உள்ளே இருந்த ஊழியர்களை கீழே இறக்கி விட்டு புகை வெளியேறுவதை சரி செய்ய முயன்றார். அப்போது குபீரென தீப்பிடித்து வேன் எரிந்தது.
தகவல் அறிந்ததும் அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதில் வேன் முற்றிலும் எரிந்து நாசமாகியது.
இந்தத் தீ விபத்து திருவள்ளூர் மாவட்ட எல்லையில் நடந்ததால் திருவாலாங்காடு போலீசார் விசாரித்தனர். புகை வெளியேறுவதை கண்ட டிரைவர் வேனை நிறுத்தியதால் 7 பேரும் அசம்பாவிதமின்றி உயிர் தப்பினர். ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரக்கோணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.