உள்ளூர் செய்திகள்
விசைத்தறி தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி

சங்கரன்கோவிலில் இன்று விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் -700 பேர் கைது

Published On 2021-12-23 07:42 GMT   |   Update On 2021-12-23 07:42 GMT
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி சங்கரன்கோவிலில் இன்று விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வின்மை போன்ற இடர்களால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 2 மாதங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 10 சதவீத கூலி உயர்வு என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் இதுவரை விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன் கோவில், புளியங்குடி, சுப்புலாபுரம் பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கூடுதல் டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட சுமார் 700 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி தொடர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 700 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Tags:    

Similar News