உள்ளூர் செய்திகள்
மாவட்ட குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க குழு- கலெக்டர் தகவல்

Published On 2021-12-23 06:42 IST   |   Update On 2021-12-23 06:42:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,267 குடியிருப்பு பகுதிகளும் அருகாமையில் உள்ள பள்ளிகளோடு பள்ளித் தகவல் மேலாண்மை முறைமையில் இணைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் `இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பாக மாவட்ட குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி கூறியதாவது:-

மாவட்டத்தில் `இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பாக 24 கலைக்குழுக்கள்
வாயிலாக இதுவரை 1,728 குடியிருப்புகளில் விழிப்புணர்வு கலைப்பயணங்கள் நிகழ்த்தி 8,489 தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர். பதிவு செய்துள்ள தன்னார்வலர்களில் 1,209 பேர் தேர்வு எழுதி 549 தன்னார்வலர்கள் 20-ந் தேதி வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், கண்காணிப்பதற்கும், பதிவு செய்வதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் மாவட்ட அளவில் 5 ஆசிரியர்களும், ஒன்றிய அளவில் 26 ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். ஒன்றிய அளவிலான குழு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர், குறுவளமைய தலைமையாசிரியர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், கல்வி மற்றும் சமூக செயல்பாடுகளில் அனுபவமிக்க தனிநபர், பஞ்சாயத்து நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு அமைக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,267 குடியிருப்பு பகுதிகளும் அருகாமையில் உள்ள பள்ளிகளோடு பள்ளித் தகவல் மேலாண்மை முறைமையில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் வாசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News