உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் ஏற்பட்ட மோதல்

கடலூரில் பரபரப்பு - அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம்

Published On 2021-12-21 01:30 GMT   |   Update On 2021-12-21 01:30 GMT
அ.தி.மு.க. நடத்திய உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

இந்நிலையில், உள்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தகவலறிந்த முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் இருவரையும் சமாதானப்படுத்தினார். 
கூட்டம் முடிந்தும் அங்கிருந்து புறப்பட்ட சேவல்குமார் காரை கந்தன் ஆதரவாளர்கள் வழிமறித்தனர். அதன்பின் அந்த காரை அடித்து நொறுக்கியதில் கார் கண்ணாடி உடைந்தது. இதனால் சேவல்குமாரின் ஆதரவாளர்கள் ஓடிவந்து தகராறில் ஈடுபட்டனர்.

இருவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகம் முன்பு உள்ள கடலூர்-திருவந்திபுரம் சாலையில் மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருதரப்பை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரை சமாதானப்படுத்தி அனுப்பினர். அ.தி.மு.க. கட்சி அலுவலகம் முன் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News