உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்- ஆண் குழந்தை இறந்தே பிறந்ததால் கணவர் மீது வழக்கு

Published On 2021-12-20 11:03 IST   |   Update On 2021-12-20 11:03:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (34). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி கோமதி (28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவ பரிசோதனையின்போது, கடந்த 13-ந்தேதி பிரசவத்திற்கு நாள் குறித்து கொடுத்துள்ளனர். ஆனால் அன்று கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்த லோகநாதன் தனது அக்காள் கீதாவின் உதவியுடன் யூடியூப் சேனலை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதில் கடும் போராட்டத்திற்கு பிறகு கோமதிக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அதிக ரத்த போக்கால் கோமதியின் உடல் நிலை கவலைக்கிடமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் உடனடியாக தனது மனைவியை அருகேயுள்ள புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.

அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக புன்னை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோகன் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் லோகநாதன் அவரது அக்கா கீதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar News