உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்ட சிவாலயங்களில் நாளை ஆருத்ரா தரிசன விழா

Published On 2021-12-19 09:15 GMT   |   Update On 2021-12-19 09:15 GMT
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் உற்சவமூர்த்திகள் கோவில் முன்புறம் உள்ள பட்டிவிநாயகரை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நாளை 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடக்க உள்ளது. 

இதற்காக திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமியம்மனுக்கு கோவில் விழா மண்டபத்தில் மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் உற்சவமூர்த்திகள் கோவில் முன்புறம் உள்ள பட்டிவிநாயகரை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமியம்மன் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, பட்டி விநாயகரை 11 சுற்றுக்கள் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உற்சவ மூர்த்திகள் கனகசபை மண்டபத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 

பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தபடி வந்து ஆருத்ரா தரிசன விழாவில் வழிபடலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோல் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், சேவூர் கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் நாளை ஆருத்ரா மஹா தரிசன விழா நடக்கிறது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவுக்கு, ஸ்ரீ நடராஜர் பெருமான், சிவகாமி அம்பாளுக்கு அணிவிக்க சிறப்பு மாலை தயாரிக்கப்பட்டுள்ளது. சற்று வித்தியாசமாக கடல் சோழி மூலம் மாலை தயாரித்துள்ளார்.

இதுகுறித்து பூ வியாபாரி பாபு கூறியதாவது:-

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, ஒமைக்ரான் நோய் ஒழியவும் உலக நன்மைக்காகவும் 1,008 கடல் சோழியை கொண்டு தயாரித்துள்ளோம். 

புராண காலத்திலிருந்து ஜோதிடம் பார்க்க நல்ல நேரம் பார்க்க என அனைத்து விசேஷங்களுக்கும் கடல் சோழியைத்தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 


ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு மாலை, கிரீடம், குஞ்சிதபாதம், ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கு மாலை, கிரீடம், ஜடை அலங்காரம் தயாரித்துள்ளோம். இந்த மாலையில் பூஜைக்கு உகந்த தர்ப்பை புல், ருத்ராட்சம் மற்றும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News