உள்ளூர் செய்திகள்
நல்லூர் விஸ்வேஸ்வரசாமி கோவிலில் ரூ.24 லட்சம் செலவில் திருப்பணி
ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூர் அருகே விஸ்வேஸ்வரசாமி, விசாலாட்சி அம்மன் மற்றும் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 300 ஆண்டு பழமையான இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது.
இந்த கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
இந்த கோவிலில் திருப்பணிகள் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி ராஜகோபுரம் பஞ்ச வர்ணம் பூசும் பணி, மூலவர் சன்னதி விமானங்கள் பஞ்ச வர்ணம் பூசும் பணி மற்றும் மகா மண்டபம், திருமடப்பள்ளி, அலுவலகம், வாகன மண்டபம், மதில்சுவர் பழுதுபார்த்தல் போன்ற திருப்பணிகளுக்கு ரூ.24 லட்சத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திருப்பணிகளை தொடங்க தை மாதம் உகந்த முகூர்த்த நாளில் சிலைகளை அகற்றாமல் விமானம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளது என இந்து அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.