உள்ளூர் செய்திகள்
வேளாங்கண்ணி அருகே ரூ.1 லட்சம் திருடிய டிரைவர் கைது
வேளாங்கண்ணி அருகே ரூ.1 லட்சம் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 30). இவர் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகே பிராய்லர் கோழி கடை நடத்தி வருகிறார். இங்கிருந்து சிக்கல், நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை கடைகளுக்கு சரக்கு வேன் மூலம் கோழிகளை விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் திருப்பூண்டி அருகே உள்ள சிந்தாமணி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (33) என்பவர் சரக்கு வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும், முருகானந்தம், சிவானந்தம், கார்த்திகேயன் ஆகியோர் கோழிகளை வேனில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் கோழிகளை கடைகளில் இறக்கி விட்டுவிட்டு, அதற்கான தொகை ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 420-ஐ வசூல் செய்து கொண்டு சரக்குவேனில் வந்துள்ளனர். இவர்கள் பரவை கடைத்தெரு அருகே வேனை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வேனில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் டிரைவர் மணிகண்டன், பணத்தை எடுத்துச் சென்று அருகில் மண்ணில் புதைத்து வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடிய ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.