உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

8 மாதங்களில் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் ரூ.20ஆயிரம் கோடி

Published On 2021-12-17 07:25 GMT   |   Update On 2021-12-17 07:25 GMT
ஆயத்த ஆடை ரகங்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி., ஜனவரி 1-ந்தேதிமுதல் 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
திருப்பூர்:

நடப்பு நிதியாண்டில் (2021-22) ஒவ்வொரு மாதமும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் உயர்ந்து வருகிறது. 

கடந்த நிதியாண்டின் நவம்பர் மாதம் ரூ.7,746.67 கோடிக்கு நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடப்பு நிதியாண்டில் ரூ.7,987.32 கோடிக்கு நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் மொத்தம் ரூ.52,173.37 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

இந்த வர்த்தகம் நடப்பு 2021-22 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ரூ. 71,601.09 கோடியாக 37.24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் மாத வரையிலான 8 மாதங்களில் இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.38 ஆயிரத்து 476 கோடியாக எட்டியுள்ளது. பின்னலாடை நகரமான திருப்பூரின் ஏற்றுமதி ரூ.20 ஆயிரத்து 454 கோடியாக உள்ளது. 

இந்தநிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி., குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) சார்பில் ஆலோசகர் கிருஷ்ணராஜ், பின்னலாடை துறையினரின் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணராஜ் கூறியதாவது:-

ஆயத்த ஆடை ரகங்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி., ஜனவரி 1 -ந்தேதிமுதல் 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. நூல் விலை உயர்வு, கன்டெய்னர் பற்றாக்குறையால் உற்பத்தி செலவினங்கள் உயர்ந்துள்ளன. வரியை உயர்த்தினால் குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும். 

பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆடைகளுக்கு வரி உயர்த்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என நிதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News