உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்சை வழிமறித்து துரத்தி வந்த ஒற்றை யானை

ஒகேனக்கல் சாலையில் அரசு பஸ்சை 1 கி.மீ தொலைவு விரட்டி வந்த ஒற்றை யானை

Published On 2021-12-17 07:21 GMT   |   Update On 2021-12-17 07:21 GMT
பொதுமக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே சின்னாறு வனப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த சில நாட்களாக முகாமிட்டு சுற்றி திரிந்து வருகிறது. வனப்பகுதியில் சுற்றித்திரியும் இந்த யானை, அவ்வப்போது ஒகேனக்கல்பென்னாகரம் சாலையில் ‘‘ஹாயாக ’’ உலாவுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே அந்த சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை, பென்னாகரத்தில் இருந்து சுமார் 40-க்கும் அதிகமான பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று, ஒகேனக்கல் நோக்கி சென்றது. அப்போது, பண்ணப்பட்டி அருகே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒற்றை யானை சாலைக்கு வந்தது. இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த டிரைவர், பஸ்சை நிறுத்தினார். ஆனால், பஸ்சை கண்ட யானை, அதனை நோக்கி வேகமாக வந்தது. இதனை கண்ட பயணிகள் பயத்தில் அலறினர்.

இதனால், சமயோசிதமாக செயல்பட்ட டிரைவர், பஸ்சை  பின்னோக்கியபடி வேகமாக இயக்கினார். அந்த யானையும் விடாமல் பஸ்சை நோக்கி வரத்தொடங்கியது. சுமார் ஒரு கி.மீ. தொலைவு பஸ்சை பின்னோக்கியே டிரைவர் ஓட்டிச் சென்றார். அதன் பிறகு அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால், டிரைவர் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன்பிறகு அந்த பஸ் ஒகேனக்கல் நோக்கி புறப்பட்டு சென்றது.

பொதுமக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News