உள்ளூர் செய்திகள்
மரணம்

நாகையில் குளத்தில் மூழ்கி மாணவன் மரணம்

Published On 2021-12-16 15:35 IST   |   Update On 2021-12-16 15:35:00 IST
நாகையில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
நாகப்பட்டினம்:

நாகை சால்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வமணி மகன் செல்வராகவன்(வயது 15). நாகையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். செல்வராகவன் மற்றும் அவனுடைய நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரை குளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர்.

அப்போது நண்பர்களுடன் செல்வராகவன் குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றான். பாதி தூரம் சென்றபோது தொடர்ந்து செல்வராகவனால் நீந்த முடியாததால் குளத்தில் மூழ்கினான்.

இதையடுத்து நண்பர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் செல்வராகவனை தேடினர். ஆனால் அவனை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு படை வீரர்கள் குளத்தில் மூழ்கிய செல்வராகவனை தீவிரமாக தேடினர்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு செல்வராகவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். அவனுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News