உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை

Published On 2021-12-16 05:13 GMT   |   Update On 2021-12-16 05:13 GMT
அமைச்சர் எ.வ.வேலு உத்தரவை தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக 2 மணி நேரத்தில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்தனர்.
செங்கல்பட்டு:

கடந்த மாதம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருங்குன்றம் பகுதியில் உள்ள பாலாற்று மேம்பாலம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த பாலமானது கட்டப்பட்ட நிலையில், தற்போது பெய்த கனமழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு கடுமையான சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

இதனால் இங்கு பயணிக்கும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வதால் நாள்தோறும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். அப்போது இப்பாலம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்தார். இந்தநிலையில் அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக 2 மணி நேரத்தில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்தனர்.


Tags:    

Similar News