உள்ளூர் செய்திகள்
போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடியில் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2021-12-15 15:14 IST   |   Update On 2021-12-15 15:14:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கறம்பக்குடி ஒன்றிய குழு சார்பாக, ஒன்றிய தலைவர் ராமதாஸ் தலைமையில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தொடங்கி வைத்தார்.

வெள்ளம் மழை பாதிப்பிற்கு, தமிழக அரசு கோரியுள்ள ரூ.4.025 கோடி நிதி மற்றும் தற்போதைய பாதிப்பிற்கு கோரும் நிதியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். முழுமையாக அழிந்துள்ள தாளடி சம்பா நெல் சாகுபடிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். தனியார் உர கடைகளில் தற்பொழுது பொட்டாஷ் யூரியா மற்றும் ரசாயன உரங்கள் விவசாயிகளிடம் அதிகப்படியான விலைக்கு விற்பதை, மாவட்ட நிர்வாகம் நியாயமான விலைக்கு விற்க உத்தரவிட வேண்டும்.

கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பாரபட்சமின்றி துரிதமாக காப்பீடு வழங்க வேண்டும், கால்நடை மருத்துவமனைகளில் கோமாரி தடுப்பூசி போடவும், கோமாரி நோயினால் இறந்த கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கடும் மழை வெள்ளத்திலும் கறம்பக்குடியை சுற்றியுள்ள குளங்கள் நிரம்பாததற்கு வரத்து வாரிகள் வெட்டப்படாததே காரணம் எனில் துரிதமாக வரத்து வாரிகளை மராமத்து செய்திட கோரியும் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் செங்கோடன், ஏ.ஐ.டி.யு.சி. ஆலோசகர் சேசுராஜ் மற்றும் 20க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Similar News