உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு

Published On 2021-12-14 15:30 IST   |   Update On 2021-12-14 15:30:00 IST
ராணிப்பேட்டை அருகே விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயார் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் கிராமத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாணாபாடி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (வயது 70). இவருக்கு புனிதா என்ற மகளும், அருள் (வயது 35) என்ற மகனும் உண்டு. கட்டிட மேஸ்திரியான அருளுக்கு திருமணமாகி மேனகா என்ற மனைவி உள்ளார். அவர்களுக்கு ஜிந்தியா (8) என்ற மகளும், மனோரஞ்சன் (6) என்ற மகனும் உள்ளனர்.

அருள் 7-ந்தேதி ஆற்காடு அருகில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அருள் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோனைக்குப் பின் அருளின் உடல் நேற்று மதியம் 12 மணியளவில் வாணாபாடியில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள், கிராமத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விபத்தில் பலியான மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு ஞானம்மாள் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிர்ச்சியில் மூர்ச்சையாகி கீழே விழுந்த ஞானம்மாளை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ஞானம்மாள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாகக் கூறினர். இதனால் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.

Similar News