உள்ளூர் செய்திகள்
அரசு விரைவு பஸ்

பொங்கல் பண்டிகைக்கு அரசு பஸ்களில் சொந்த ஊர் செல்ல 17 ஆயிரம் பேர் முன்பதிவு

Published On 2021-12-14 14:26 IST   |   Update On 2021-12-14 14:26:00 IST
அரசு பஸ்களில் முன் பதிவு செய்யப்படும் இடங்கள் குறைய குறைய மேலும் பஸ்களை முன்பதிவுக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக்கழகம் செய்து வருகிறது.
சென்னை:

பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் பண்டிகை விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து செல்வது வழக்கம்.

அதேபோல பிற நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

பொங்கல் விடுமுறையையொட்டி அனைத்து ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லை.

இந்தநிலையில் அரசு விரைவு பஸ்கள் மற்ற போக்குவரத்துக்கழக பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் 12, 13-ந்தேதிகளில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கான இடங்கள் இருந்து வரும் வகையில் இன்று காலை நிலவரப்படி 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆன்லைன் வழியாக முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நகரங்களை விட தென் மாவட்டங்களுக்கு அதிகளவு முன்பதிவு நடந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென் மாவட்ட மக்கள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். அவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதனால் இப்போது முதல் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் ஆம்னி பஸ்களில் அதிகளவு கட்டணம் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் அரசு பஸ்களையே சார்ந்துள்ளனர்.

அரசு பஸ்களில் முன் பதிவு செய்யப்படும் இடங்கள் குறைய குறைய மேலும் பஸ்களை முன்பதிவுக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் போக்குவரத்துக்கழகம் செய்து வருகிறது. எந்தெந்த வழித்தடங்களில் அதிக தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப பஸ்களை அதிகரிக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பொங்கல் சிறப்பு பஸ்கள் எவ்வளவு விட வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகள் அளவில் ஆலோசனை நடந்து வருகிறது.

Similar News