உள்ளூர் செய்திகள்
உள்கட்சி தேர்தலில் கலந்து கொண்ட தொண்டர்கள்

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடங்கியது

Published On 2021-12-13 13:03 IST   |   Update On 2021-12-13 13:03:00 IST
உள்கட்சி தேர்தலுக்காக தனியார் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலை முதல் ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்து விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

காஞ்சிபுரம்:

அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அ.தி.மு.க. உறுப்பினர் தேர்தல் விறு விறுப்பாக தொடங்கியது. கிளைக் கழக செயலாளர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத்தில் அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள், பேரூராட்சி வார்டு செயலாளர், அவைத் தலைவர், நகர வார்டு செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட 17 இடங்களில் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது.


 

மாங்காடு பேரூராட்சியில் நடந்த உள்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியினரிடம் விண்ணப்ப படிவத்தை வழங்கினர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் கே.பழனி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

உள்கட்சி தேர்தலுக்காக தனியார் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலை முதல் ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்து விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கிளை செயலாளர் பதவிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250, பேரூராட்சி வார்டு செயலாளர்-ரூ.300, அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகளுக்கு ரூ.200, நகர வார்டு செயலாளர்-ரூ.500 விண்ணப்ப கட்டணமாக பெறப்பட்டது. நாளையும் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.

ஆவடி வடக்கு பகுதி செயலாளர் தீனதயாளன் மரணம் அடைந்ததையடுத்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட தேர்தல் இன்று நடைபெறவில்லை. நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்கள் வழங்கும் இடத்தில் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகள் வாரியாக மேஜைகள் அமைக்கப்பட்டு படிவங்கள் வழங்கப்பட்டன. நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்துடன் உறுப்பினர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

செங்கல்பட்டுகிழக்கு மற்றும் மேற்கு அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் இன்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அமைப்பு செயலாளர் ஆர்.டி.ராஜாராம் நியமிக்கப்பட்டு இருந்தார். ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டி போட்டு விண்ணப்ப படிவத்தை வாங்கி சென்றனர்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், பம்மல், அனாகபுத்தூர், செம்பாக்கம் ஆகிய 7 நகரங்களிலும் சில்லப்பாக்கம், திருநீர்மலை, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய 6 பேரூராட்சிகளிலும் பரங்கிமலை மேற்கு, காட்டாங்கொளத்தூர் மேற்கு, காட்டாங்கொளத்தூர் கிழக்கு, காட்டாங்கொளத்தூர் வடக்கு ஆகிய 4 ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெற்றது.

முக்கிய பதவிகளை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது. அவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 10 ஆண்டுகள் பயன்படுத்திய சாலைகளில் சுங்க கட்டணம் விதிக்க தடைவிதிக்க வேண்டும்- அன்புமணி அறிக்கை

Similar News