ஸ்ரீபெரும்புதூர் அருகே பக்கத்து வீட்டு தகராறை தடுத்த வாலிபர் அடித்துக் கொலை
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சேலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது38).
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்திரசேகர். இவரது வீட்டுக்கு நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனை சுரேஷ் கண்டித்து தடுத்தார். இதனால் சுரேசுக்கும், தட்சிணாமூர்த்தி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் சுரேசை அடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. கீழே விழுந்ததில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தி உள்பட 3 பேரை தேடி வருகிறார்.
தட்சிணாமூர்த்திக்கும், சந்திரசேகருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த மோதல் தட்சிணாமூர்த்தி தனது உறவினர்களிடம் தெரிவித்ததால் அவர்கள் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற சுரேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.