உள்ளூர் செய்திகள்
அப்பாவு, தலைமைச் செயலகம்

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம்: ஜனவரி 5-ந்தேதி கூடுகிறது

Published On 2021-12-13 07:07 GMT   |   Update On 2021-12-13 11:18 GMT
தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற இடத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்- அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தினமும் சுமார் 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் மிக மோசமான நிலை இருந்தது. அதை படிப்படியாக குறைத்து முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். கலைவாணர் அரங்கத்தில் வைத்து குறிப்பிட்ட இடை வெளியுடன் கூடிய ஒரு அமைப்பை உருவாக்கி சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் அங்கே அமர வைத்து கடந்த முறை கூட்டம் நடைபெற்றது.

தற்போது முதல்- அமைச்சரின் முழு முயற்சியினால் தினமும் 600-க்கு உட்பட்டுதான் கொரோனா பாதிப்பு இருக்கிறது. எனவே சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலக வளாகத்துக்குள் உள்ள சட்டமன்றத்திற்குள் சட்டசபையை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் கவர்னர் உரையுடன் ஜனவரி 5-ந்தேதி தொடங்கப்பட இருக்கின்ற சட்டமன்றம் தலைமை செயலக வளாகத்தில் ஏற்கனவே நடை பெற்ற சட்டமன்ற இடத்திலேயே நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த சட்டசபை கூட்டம் வருகிற ஜனவரி (2022) 5-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து பொது பட்ஜெட்டும், அடுத்ததாக மானிய கோரிக்கையும் இங்கேயே நடைபெறும். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு டச் ஸ்கிரீன் (தொடுதிரை) வசதி செய்து கொடுக்கப்படும். காகிதமில்லா கூட்டத்தொடர் இங்கு நடைபெறும்.

தமிழகத்தில் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தைரியமாக உள்ளனர். முககவசம் அணிந்து இருப்பதால் கொரோனா பயம் குறைந்து உள்ளது. சுகாதாரத்துறை கடுமையான முயற்சி செய்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் 83 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுவிட்டது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

ஜனவரி மாதம் நடை பெறும் சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும்.

சட்டசபை கூட்டத்தை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

கேள்வி: 3 நிதிக்குழுவை கண்காணிக்க பாராளுமன்றத்தில் இருந்து ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து உள்ளார்கள். இது என்ன நடைமுறை? அவரது பணி என்ன?

பதில்: நிதிக்குழுவை கண்காணிப்பதற்காக அதிகாரியை நியமித்தது போல் எனக்கு தெரிய வில்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்துதான் செயல்படும். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய வரிகள் மத்திய அரசுக்கு செல்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்துதான் பல திட்டங்களை செயல் படுத்துகின்றன. எல்லா திட்டங்களும் மாநில அரசு மூலம்தான் நடைபெறும். எனவே கண்காணிக்க வேண்டிய அவசியத்திற்கு இங்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதியுடன் கோட்டையில் சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.

அதன் பிறகு கலைவாணர் அரங்கத்துக்கு சட்டசபை கூட்டம் மாற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டு களாக கலைவாணர் அரங்கத்தில்தான் சட்டசபை நடந்து வந்தது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றே போதும் கலைவாணர் அரங்கத்தில்தான் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதிவரை கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி சட்டசபை வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News