உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திருவண்ணாமலை அருகே அரசியல் கட்சி பெண் பிரமுகர் வீடு உள்பட 2 இடங்களில் கொள்ளை

Published On 2021-12-12 16:11 IST   |   Update On 2021-12-12 16:11:00 IST
திருவண்ணாமலை அருகே அரசியல் கட்சி பெண் பிரமுகர் வீடு உள்பட 2 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் துரைராஜ் நகரில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கலாவதி (வயது56) அரசியல் கட்சி பிரமுகர். இவர்களுக்கு போந்தை என்ற இடத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. அதனை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு அங்கு சென்று விட்டனர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

நகை திருட்டு போன வீட்டின் உரிமையாளர் கலாவதி, அரசியல் பிரமுகர் ஆவார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதே பகுதியில் இன்னொரு வீட்டிலும் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை, ரூ.2000 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

இந்த துணிகர திருட்டு தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேங்கிக்கால் பகுதியில் திருடர்கள் வியாபாரம் செய்வது போல் தெரு தெருவாக தினமும் சென்று இடங்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருகிறார்கள் என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்தநிலையில் ஒரே பகுதியில் 2 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எனவே தெருக்களில் மர்மநபர்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும். திருட்டுப்போன நகைகளை மீட்டு தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே நாளில் 2 வீடுகளில் திருட்டு நடைபெற்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News