உள்ளூர் செய்திகள்
கொள்ளை

அறந்தாங்கி அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை

Published On 2021-12-12 15:23 IST   |   Update On 2021-12-12 15:23:00 IST
கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரபீஸ்கான் (34), இப்ராஹிம் (52), ஜாஹீர் (54). இவர்கள் 3 பேரும் கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்குக் கடற்கரைசாலையில் முறையே 2 மளிகைகடைகளும், ஒரு காய்கறி கடை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் 10 மணிக்கு 3 பேரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் இரவு 1 மணி அளவில் கடைகளின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று முதல் மளிகை கடையில் ரூ. 22 ஆயிரம், 2-வது மளிகை கடையில் ரூ. 42 ஆயிரம், காய்கறி கடையில் ரூ.10 ஆயிரம் மற்றும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

தகவலறிந்த கடை உரிமையாளர்கள் சென்று பார்க்கையில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News