உள்ளூர் செய்திகள்
மரக்கன்றுகள்

பசுமை காடுகள் திட்டத்தில் வளர்க்கப்பட்ட 3½ லட்சம் மரக்கன்றுகள்- பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் தேக்கம்

Published On 2021-12-12 13:11 IST   |   Update On 2021-12-12 13:11:00 IST
பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வளர்க்கப்பட்ட இந்த மரக் கன்றுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்து விட்டன.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்த்து வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

குன்னவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வெண்டிவாக்கம் மற்றும் மலையாங்குளம் கிராமங்களில் தேக்கு, நெல்லி, நாவல், குமிழ், மகாகனி, வேங்கை, நீர்மத்து, பூவரசன், வேப்பம், இலுப்பை உள்ளிட்ட 20 வகையான மரக்கன்றுகள் சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் எண்ணிக்கையில் பராமரித்து வளர்க்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் வளர்க்கப்பட்டு வரும் இந்த மரக்கன்றுகள் செப்டம்பர் மாதத்தில் வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த மரக்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து பட்டா சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே அளிக்கப்படும் என்று வேளாண்மை துறை மூலமாக கூறப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் இதுவரை இந்த மரக்கன்றுகளை வேளாண்மைத்துறையினர் வனத்துறையில் இருந்து பெறவில்லை.

குறிப்பிட்ட காலத்துக்குள் மரக்கன்றுகளை வாங்காததால் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் அழுகி சேதம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் மரக்கன்றுகள் கிடைக்காததால் விவசாயிகளும் பொது மக்களும் வேதனை அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வளர்க்கப்பட்ட இந்த மரக் கன்றுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்து விட்டன. இனி இதை நட்டும் பலன் இல்லை. மரக்கன்றுகளை வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர் என்றனர்.

இதற்கிடையே மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படாததற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தில் பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் 3½ லட்சம் மரக்கன்றுகள் இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்படவிடவில்லை. வேளாண்துறையினரின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த மரக்கன்றுகளை வேளாண்துறை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண்துறை முன்வராத நிலையில், வனத்துறை கேட்டுக் கொண்டால் அம்மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க.வும், பசுமைத்தாயகம் அமைப்பும் தயாராக உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.

Similar News