உள்ளூர் செய்திகள்
மரணம்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த காஞ்சிபுரம் கல்லூரி மாணவர் கீழே விழுந்து மரணம்

Published On 2021-12-12 12:12 IST   |   Update On 2021-12-12 12:12:00 IST
அரக்கோணம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த காஞ்சிபுரம் கல்லூரி மாணவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனாபுரம் புதுகண்டிகையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 18). காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை வகுப்புகள் முடிந்ததும் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு வருவதற்காக ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் தினேஷ்குமாரும் பஸ் படிகட்டில் தொங்கியவாறு பயணம் செய்தார்.

பஸ் பள்ளூர் பருவமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தினேஷ்குமார் திடீரென பஸ் படிகட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த மாதம் வேலூர் அடுத்த பெருமுகையில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியது. இதில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆற்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிகட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்வது தொடர்கிறது. கூடுதல் பஸ்கள் இயக்கியும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News