உள்ளூர் செய்திகள்
கைது

தேவகோட்டை பகுதியில் ஆடுகளை திருடிய கல்லூரி மாணவர்கள் கைது

Published On 2021-12-10 14:55 IST   |   Update On 2021-12-10 14:55:00 IST
பண தேவைக்காக ஆடுகளை திருடி சந்தையில் விற்று மது குடிப்பதை கல்லூரி மாணவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
தேவகோட்டை:

தேவகோட்டை பகுதியில் சமீப காலமாக ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

ஆறாவயல் சார்பு ஆய்வாளர்கள் மைக்கேல் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 6 பேர் ஆடுகளுடன் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் ஜி.கே.மங்கலம் சேர்ந்த மகாலிங்கம் மகன் மனோஜ் (வயது 19), அதே ஊரைச் சேர்ந்த பொன்னையா மகன் வல்லரசு (19), கீழ்மருதங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (19), அனையர் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் கருப்பசாமி பாண்டியன் (19), தளக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் மகன் அஜய் (19), அயங்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜெகன் பாலாஜி (19) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் திருவாடனை அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது பண தேவைக்காக ஆடுகளை திருடி சந்தையில் விற்று மது குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதனை அடுத்து 6 கல்லூரி மாணவர்களை கைது செய்து 2 இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கல்லூரி மாணவர்கள் ஆடு திருடியது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News