உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

Published On 2021-12-09 15:25 IST   |   Update On 2021-12-09 15:25:00 IST
முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுத்திட, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இதுவரை 75 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ஒமைக்ரான் என்ற கொரோனா புதிய வகை தொற்றினால் 3-வது அலை வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை தடுத்திட தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 71, உட்பிரிவு 1ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பொதுசுகாதார சட்டப்பிரிவின்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மற்றவர்களுக்கு கொரோனா நோயினை பரப்பும் வகையில் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். எனவே இம்மாதம் 11-ந் தேதிக்குள் முதல் தவணை போடாத அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்பவர்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை கையிலோ அல்லது கைபேசியிலோ வைத்திருக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விசாரணைகள் மற்றும் விவரங்களுக்கு 9498746781, 9345333899 என்ற செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News