உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியான 950 பேரின் குடும்பங்களுக்கு ரூ.50ஆயிரம் நிவாரணம்

Published On 2021-12-09 06:26 GMT   |   Update On 2021-12-09 06:26 GMT
மாவட்டம் தோறும் இறந்தவர் தொடர்பான முழு விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
திருப்பூர்:

கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி இரண்டு கட்ட கொரோனா அலைகளால் திருப்பூர் மாவட்டத்தில் 1,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த, 50 நபர்கள் நீங்கலாக மாவட்டத்தில் 950 நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம்  நிவாரணம் வழங்கப்படுமென அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் தோறும் இறந்தவர் தொடர்பான முழு விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும், கொரோனாவில் பலியானவர்கள் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு - 251, உடுமலை - 173, திருப்பூர் தெற்கு - 158, தாராபுரம் - 109, பல்லடம் - 95, அவிநாசி - 71, காங்கயம் - 40, மடத்துக்குளம் - 30, ஊத்துக்குளி - 23 என 950 பேர், மாவட்டத்தில் இறந்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொரோனாவில் இறந்தவர்களுக்கும் முன்கள பணியின் காரணமாக கொரோனாவில் இறந்தவருக்கும் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் பெற்றோரில் ஒருவர் இறந்திருந்தால் ரூ.3 லட்சம், இருவரும் இறந்திருந்தால் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. 

தற்போது வழங்கப்படும் ரூ. 50 ஆயிரம் நிவாரணம் அவர்களுக்கு பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இறந்த 950 நபர்களில் ரூ. 50 ஆயிரம் நிவாரணம் பெற தகுதியான வாரிசுதாரர்கள் கண்டறியப்பட்டு வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர் இருந்தால் மற்றவர்கள் ஒப்புதல் கடிதம் அளித்து ஒருவர் வங்கி கணக்கில் தொகையை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News