உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ராணிப்பேட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள பாலாறு மேம்பாலம் அருகில் நேற்று ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த சிவா (24), ராஜேஷ் (22) என்பதும், மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.