உள்ளூர் செய்திகள்
சாலையில் குட்டியை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காட்டு யானைகள்.

குட்டியை பாதுகாப்பாக அழைத்து சென்ற தாய் யானை- சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி

Published On 2021-12-06 15:30 IST   |   Update On 2021-12-06 15:34:00 IST
மசினகுடி-மாயார் சாலையில் குட்டியை பாதுகாப்பாக அழைத்து சென்ற தாய் யானை அழைத்து சென்ற காட்சியை கண்டு சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனங்களில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கேரளா முதல் கூடலூர், முதுமலை, கர்நாடகா மற்றும் சத்தியமங்கலம் வரை உணவு தேவை உள்ளிட்ட காரணங்களால் காட்டுயானைகள் இடம்பெயர்ந்து சென்று வருகின்றன. தற்போது கூடலூர், முதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாலையில் காட்டுயானைகள் கூட்டமாக உலா வந்தன.

அதில் பிறந்து சில வாரங்களே ஆன குட்டியானையும் அடங்கும். அப்போது அந்த சாலையில் சுற்றுலா வாகனங்களும் வந்தன. உடனே தாய் யானை உள்பட 2 பெரிய யானைகள் தங்களுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பாக குட்டியானையை அழைத்து சென்றன.

இதை கண்ட சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அந்த காட்சியை மிகவும் ஆச்சரியத்துடன் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற காட்டுயானைகள் அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டுயானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. அவை குறிப்பிட்ட வயது வரை குட்டியை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கும். இதுபோன்ற காட்சியை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் கண்டு ரசிக்க வேண்டும். ஏனென்றால் குட்டியானை இருக்கும்போது காட்டுயானைகள் திடீரென தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.

Similar News