உள்ளூர் செய்திகள்
கொள்ளை

சிதம்பரத்தில் பல்கலைகழக மாணவரை தாக்கி பணம் பறிப்பு

Published On 2021-12-06 09:29 IST   |   Update On 2021-12-06 09:29:00 IST
சிதம்பரத்தில் இன்று அதிகாலையில் பல்கலைகழக மாணவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

கரூர்பகுதியை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 18). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக பல்கலைகழக வளாகத்தில் உள்ள தென்றல் இல்லத்தில் தங்கி உள்ளார்.

தற்போது விடுமுறைக்காக பரணிதரன் கரூர் சென்றார். அங்கிருந்து இன்று அதிகாலை ரெயில் மூலம் சிதம்பரம் ரெயில் நிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து பல்கலை கழகத்துக்கு நடந்து சென்றார். அப்போது பரணிதரன் கொண்டுவந்த பை ஒன்றை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டார்.

இதனை எடுப்பதற்காக மீண்டும் ரெயில் நிலையத்துக்கு சென்றார். பையை எடுத்துக்கொண்டு பரணிதரன் விடுதி நோக்கி நடந்து சென்றார். அதிகாலை என்பதால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. விடுதி அருகே சென்ற போது மர்மநபர்கள் 3 பேர் வழிமறித்தனர்.

அவர்களை பார்த்ததும் பரணிதரன் அங்கிருந்து ஓட முயன்றார். உஷாரான மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து கண்மூடிதனமாக தாக்கினர். பின்னர் பரணிதரன் வைத்திருந்த ரூ.2,500 ரொக்கப்பணம் செல்போன் புளுடூத் ஆகியவற்றை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பரணிதரன் கூச்சலிட்டார். ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் பரணிதரனை சரமாரியாக குத்தினர். இதில் அவரது முதுகு, கை, தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதால் அலறிதுடித்தவாறு கீழே சரிந்தார்.

சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பரணிதரன் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News