உள்ளூர் செய்திகள்
ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலையில் முதியவருக்கு ஆயுள் தண்டனை- ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2021-12-05 15:50 IST   |   Update On 2021-12-05 15:50:00 IST
அரக்கோணம் அருகே தக்கோலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டி என்பவருக்கும் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்சினை இருந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி ஏற்பட்ட தகராறில் எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டி, தான் வைத்திருந்த சூரி கத்தியால் வெங்கடேசனை குத்திக் கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதன் மீதான விசாரணை ராணிப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.

அதில் எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி வாதாடினார்.

Similar News