உள்ளூர் செய்திகள்
கைது

லாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வந்த 8½ கிலோ குட்கா பறிமுதல்- 3 பேர் கைது

Published On 2021-12-05 05:05 GMT   |   Update On 2021-12-05 05:05 GMT
போலீசார் வாகன சோதனையில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 மூட்டை தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.
குன்னூர்:

தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்டு குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குன்னூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்தவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை நிறுத்தி அதில் இருந்த பேரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. உடனடியாக லாரியில் ஏறி ஆய்வு மேற்கொண்டனர். லாரியில் தேங்காய் மட்டைகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

அதனை அகற்றி விட்டு போலீசார் சோதனை செய்தபோது மட்டைகளுக்கு நடுவே ஏராளமான சாக்கு மூட்டைகள் கிடந்தன. அந்த மூட்டைகளை எடுத்து போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.8½ லட்சம் ஆகும்.

பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியை சேர்ந்த ராஜூ(29), குருராஜி(24), சுரேஷ்(28) என்பது தெரியவந்தது. இவர்கள் கர்நாடகா குண்டல்பெட்டில் இருந்து கூடலூர், குன்னூர் வழியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 மூட்டை தடைசெய்யப்பட்ட குட்காவையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News