உள்ளூர் செய்திகள்
வயலில் மூழ்கிய நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி

வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும் - கலெக்டர் தகவல்

Published On 2021-12-03 17:06 IST   |   Update On 2021-12-03 17:06:00 IST
வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கன மழையால் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கண்ணி, மேலப்பிடாகை, வாழக்கரை, மடப்புரம், பாலக்குறிச்சி, இறையான்குடி சோழவித்தியாபுரம் ஆகிய கிராமங்களில் தற்போது பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர் பாதிப்புகளை 2-வது முறையாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை இணைந்து கணக்கெடுத்து வருகிறது.

முதலில் பெய்த கனமழையில் 14 ஆயிரம் 500 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்ததாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது பெய்த மழையில் 51 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஆனால் வயல்களில் தேங்கி உள்ள மழைநீர் முழுவதுமாக வடிந்த பிறகு தான் சரியான பயிர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து நாகூர் வள்ளியம்மை நகர், அமிர்தா நகர், அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்த மருத்துவ முகாம்களையும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், தாசில்தார் ஜெயபால், நாகூர் நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News