உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வரதராஜன் பேசிய காட்சி.

பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2021-12-03 09:29 GMT   |   Update On 2021-12-03 09:29 GMT
எந்த இடத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினை நடந்தால் பயப்படாமல் தைரியமாக தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
திருப்பூர்:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 'போக்சோ' சட்டம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளிகளில் திருப்பூர் மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் தெற்கு இன்ஸ்பெக்டர் பிச்சையா, பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வரதராஜன் பங்கேற்று பேசியதாவது:-

நீங்கள் வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிக்கு வந்து திரும்பும் வரை ஏதாவது ஒரு இடத்தில், யாராவது 'உங்களை தவறாக பார்க்கறாங்க, பேசுறாங்க, பழகுறாங்க' என உங்களுக்கு தோன்றினால் தயங்காமல் 1098 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் செய்யலாம். 

பெற்றோர், பள்ளி ஆசிரியர், போலீசார் என யாராவது ஒருவரிடம் உங்கள் பிரச்சினையை முதலில் தெரிவிக்க வேண்டும். நீங்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வீடு, வெளியே, பள்ளி என எந்த இடத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினை நடந்தால் பயப்படாமல் தைரியமாக தெரிவிக்க வேண்டும். 

உங்களுடைய பெயர், அடையாளம் தெரியாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பள்ளி பருவத்தை தவறவிட்டால் மீண்டும் திரும்ப கிடைக்காது. 

ஒவ்வொருவரும் படிப்பில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக படியுங்கள். நன்றாக படித்தால், நல்ல வேலைக்கு செல்ல முடியும். உங்கள் படிப்புக்கு இடையூறாக உள்ள விஷயங்களை புறந்தள்ளி விட்டு படியுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News