உள்ளூர் செய்திகள்
வரகூர் கொளப்பாடி பகுதியில் பரங்கிக்காய் வயலில் மழைநீர் தேங்கியுள்ள காட்சி.

குன்னம் பகுதியில் பருவமழையால் பூசணி, பரங்கிக்காய்கள் அழுகின

Published On 2021-12-02 12:57 IST   |   Update On 2021-12-02 12:57:00 IST
குன்னம் பகுதியில் பருவமழையால் பூசணி, பரங்கிக்காய்கள் நீரில் மூழ்கியதால் அழுகி வருகின்றன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவை பிரதானமாக பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக குன்னம், ஒதியம், அந்தூர், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டக்குடி, புதுவேட்டக்குடி புதூர், அய்யலூர், அய்யலூர் குடிகாடு, வரகுபாடி, சிறுகன்பூர், நாரணமங்கலம், சாத்தனூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் கொடி வகையான வெள்ளை பூசணி, சாம்பார் பரங்கி மற்றும் மஞ்சள், மரவள்ளி, சேனைக்கிழங்கு ஆகியவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக விளைநிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கின. அதேபோல் பூசணி மற்றும் பரங்கி கொடிகளும் நீரில் மூழ்கியதால் நன்கு விளைந்த காய்கள் அனைத்தும் வயலிலேயே தற்போது அழுகி வீணாகி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கிலோ ரூ.10-லிருந்து ரூ.15 வரை விற்பனையான பரங்கி மற்றும் பூசணிக்காய்கள் தற்போது கிலோ ஒரு ரூபாய்க்கு கூட வாங்க யாரும் முன்வருவவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், விளைவிக்கப்பட்டிருந்த காய்களில் பாதியளவு அழுகி விட்டதால் மீதமுள்ள காய்களை வாங்குவதற்கு வியாபாரிகள் தயங்குகின்றனர். கடன் வாங்கி பயிரிட்ட காய்கறிகள் தொடர்ந்து அழுகி வருவதால் எங்களது பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News