உள்ளூர் செய்திகள்
கொத்தமங்கலத்தில் பழைய ஆழ்குழாய் கிணறு மூலம் மழை நீரை சேமிக்கும் விவசாயி
கொத்தமங்கலத்தில் மழை தண்ணீர் வீணாகாமல் பழைய ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீராக விவசாயி ஒருவர் சேமித்து வருகிறார்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வந்தாலும் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிறையாமல் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நீர்நிலைக்கும் தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் மராமத்து இல்லாமலும் ஆக்கிரமிப்புகளாலும் காணாமல் போய்விட்டது. சில வருடங்களுக்கு முன்பு கொத்தமங்கலம் இளைஞர்கள் ஏரி, குளங்களையும் பொதுமக்களின் பங்களிப்போடு மராமத்து செய்துவிட்டு வரத்து வாரிகளை அதிகாரிகள் அடையாளம் காட்டினால் சீரமைப்பதாக பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பவில்லை.
இதே போல தான் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள நீர்நிலை வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இந்த நிலையில் கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் இணைந்து அம்புலியாறு அணைக்கட்டிலிருந்து பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் கொண்டு போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் கடந்த பல வருடங்களாக கொத்தமங்கலம் கிராமத்தில் வீரமணி என்ற இளைஞர் மழையின் போது, தன்வீட்டு கூரைத் தண்ணீரை பழைய கிணற்றில் சேமித்து குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகிறார். அதே போல சேந்தன்குடியில் ஒரு இளைஞர் மழைத்தண்ணீரை குழாய்கள் மூலம் தனது பழைய கிணற்றில் சேமித்து வருகிறார். இதே போல கீரமங்கலம் பகுதியில் பழைய பயன்படாத பல ஆழ்குழாய் கிணறுகளை விவசாயிகள் மழைநீர் சேமிப்பிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கனமழை பெய்து தண்ணீர் வீணாகி செல்வதைப் பார்த்த கொத்தமங்கலம் விவசாயி ரவி தனது பழுதான பழைய ஆழ்குழாய் கிணற்றில் சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தி வருகிறார். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பழைய ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேமிப்பிற்காக பயன்படுத்தினால் மழைத் தண்ணீர் வீணாகாமல் நிலத்தடி நீரை உயர்த்தலாம் என்று இளைஞர்கள் கூறினர்.