உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

குன்னூர் தனியார் விடுதியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா

Published On 2021-12-01 10:32 GMT   |   Update On 2021-12-01 10:32 GMT
குன்னூரில் தனியார் விடுதியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சி.எம்.எஸ். என்ற தனியார் விடுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருந்து அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் விடுதியில் உள்ள மாணவிகள் சிலருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது.

இதையடுத்து விடுதியில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் விடுதியில் உள்ள 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதி ஊழியர்கள், மாணவிகளுடன் பள்ளியில் படிப்பவர்கள் என மொத்தம் 100 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனியார் விடுதி மூடப்பட்டது. தொடர்ந்து தனியார் விடுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியில் 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில் நீலகிரி மாவட்டத்தில் 13 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 692 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 187 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News